search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அதிகாரிகள் சோதனை"

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். #PlasticBan
    திருப்பூர்:

    தமிழகத்தில் நேற்று முதல் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

    இதனை தொடர்ந்து டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் டம்ளருக்கு பதில் கண்ணாடி டம்ளரும், தண்ணீர் பாக்கெட்டுக்கு பதில் 300 மி.லி. கொண்ட தண்ணீர் பாட்டிலும் வழங்கப்பட்டு வருகிறது.

    பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த கூடாது என டாஸ்மாக் கடை உரிமையாளர்களுக்கு சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் தடை செய்யப்பட்டு மது குடிக்க வருபவர்களுக்கு கண்ணாடி டம்ளர், 300 மி.லி. தண்ணீர் பாட்டில் மற்றும் சிறிய அளவிலான திண்பண்டங்கள் ரூ. 15 முதல் 20 -க்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் பார்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

    டாஸ்மாக் மண்டல மேலாளர் விசுவநாதன், உதவி மேலாளர்கள் உள்ளடங்கிய 4 குழுவினர் திருப்பூர், பல்லடம், உடுமலை, அவினாசி, தாராபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அதிரடி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது ஒரு சில பார்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதை கண்டறிந்தனர். அதனை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக பார் உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கையும் விடுத்தனர். திருப்பூர் மாவட்டத்தில் டாஸ்மாக் பார்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும்.

    அங்கு பிளாஸ்டிக் டம்ளர், தண்ணீர் பாக்கெட்டுகள் பயன்படுத்த கூடாது என பார் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளதாக டாஸ்மாக் மண்டல மேலாளர் விசுவநாதன் கூறினார்.

    திருப்பூர் மாவட்டத்தில் புத்தாண்டின் போது டாஸ்மாக் மது விற்பனை கடுமையாக சரிந்து உள்ளது.

    கடந்த ஆண்டு புத்தாண்டுக்கு முந்தைய நாள் பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 13 ஆயிரத்து 205 பெட்டி விற்பனை செய்யப்பட்டுள்ளது. பீர் 10 ஆயிரத்து 210 பெட்டி விற்பனை ஆகி இருக்கிறது.

    ஆனால் இந்த ஆண்டு புத்தாண்டுக்கு முந்தைய நாளான 31-ந் தேதி பிராந்தி, விஸ்கி உள்ளிட்ட மது வகைகள் 2 ஆயிரத்து 220 பெட்டிகளும், பீர் 1,890 பெட்டிகளும் தான் விற்பனை ஆகி உள்ளது.மது விற்பனை சரிவு குறித்து டாஸ்மாக் மண்டல மேலாளர் விசுவநாதனிடம் கேட்ட போது கூறியதாவது-

    திருப்பூரில் வெளி மாவட்ட தொழிலாளர்கள் தான் அதிக அளவில் தங்கி உள்ளனர்.தொழிலாளர்கள் தங்கள் சொந்த ஊருக்கு சென்று விட்டனர் தொடர் விடுமுறை மற்றும் புத்தாண்டை கொண்டாட சென்று விட்டனர்.இதனால் தான் விற்பனை குறைந்து உள்ளது. இது மட்டுமின்றி குடி போதையில் வாகனம் ஓட்டி செல்பவர்களை போலீசார் பிடித்து லைசென்ஸ் ரத்து, அபராதம் உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.இதுவும் மது விற்பனை குறைவுக்கு ஒரு காரணமாகும். பொங்கலுக்கு பிறகு நிலைமை சீராகும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார். #PlasticBan
    கூடலூர் நகர் பகுதியில் நகராட்சி ஆணையாளர் மற்றும் சுகாதார அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தி தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்றவர்களுக்கு ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் விதித்ததனர்.

    கூடலூர்:

    கூடலூர் நகரம் உள்பட மாவட்டம் முழுவதும் பாலித்தீன் பைகள் விற்பனை செய்யுவும், ஓட்டல்கள், டீக்கடைகளில் பயன்படுத்தவும் நேற்று முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மீறி பாலித்தீன் பைகள் விற்பனை மட்டும் பயன்பாடு தொடர்ந்து உள்ளதா? என நகராட்சி ஆணையாளர் சத்தியநாதன் தலைமையில் பொறியாளர் சிவக்குமார், கம்பம் வருவாய் அலுவலர் பரமசிவம், நகராட்சி சுகாதார அலுவலர் ரவிச்சந்திரன், சுகாதார உதவியளர்கள் குமார், தினே‘ மற்றும் துப்புரவு தொழிலாளர்கள் கொண்ட குழுவினர் கடைகள், ஓட்டல்கள், டீக்கடைகளில் சோதனை நடத்தினார்கள். 

    அப்போது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு இருந்த பாலித்தீன் பைகள், டீக்கடைகளில் வைக்கப்பட்டிருந்த டீக்கப்புகள் பறிமுதல் செய்யப்பட்டது. அதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் ஆகும். தடை செய்யப்பட்ட பாலித்தீன் பைகள் விற்ற 4 பேருக்கு ரூ.12 ஆயிரத்து 500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது பெண் உட்பட இருவரிடம் 232 கிராம் தங்கத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #trichyairport
    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் தங்கம் கடத்தும் சம்பவம் அடிக்கடி நடைபெற்று வந்தது. இது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடைபெற்று கடத்தலுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து சமீப காலமாக தங்கம் கடத்தும் சம்பவம் குறைந்திருந்தது.

    தற்போது மீண்டும் கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று ஒரே நாளில் திருச்சி பெண் உட்பட 5 பயணிகளிடம் இருந்து மொத்தம் 7 கிலோ 765 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இது விமான நிலைய வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இதற்கிடையே நேற்று நள்ளிரவு சிங்கப்பூரில் இருந்து வந்த விமானம் திருச்சி விமான நிலையத்திற்கு வந்தது. அதில் வந்த பயணிகளின் உடமைகள், ஆவணங்களை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த கோபாலகிருஷ்ணன், திருவாரூரை சேர்ந்த கவிதா ஆகியோரிடம் இருந்து தங்க சங்கிலிகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவற்றின் எடை 232 கிராம் இருந்தது. இதன் மொத்த மதிப்பு ரூ.7 லட்சத்து 7 ஆயிரம் என அதி காரிகள் தெரிவித்துள்ளனர். 

    மேலும் தங்கம் கடத்தலில் ஈடுபட்ட கவிதா, கோபாலகிருஷ்ணனிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  திருச்சி விமான நிலையத்தில் தொடர்ந்து கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #trichyairport
    திருப்பதி-தனப்பள்ளி சாலையில் உள்ள ஓட்டலில் ஒன்றில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மாதிரியை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். #Tirupati #TirupatiHotels
    திருமலை:

    திருப்பதி மாநகராட்சியில் அனுமதியில்லாமல் சிலர் ஓட்டல்கள் நடத்துவதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் உணவுப்பொருள் கண்காணிப்புத் துறை அதிகாரி ராமகிருஷ்ணாச்சாரி, உணவுப் பொருள் பாதுகாப்புத்துறை அதிகாரி சேஷாரெட்டி, பறக்கும்படை அதிகாரி ராமசாமி மற்றும் உணவுப் பொருள் ஆய்வாளர்கள் திருப்பதி மாநகராட்சியில் உள்ள பல்வேறு ஓட்டல்கள், துரித உணவகங்கள், சிற்றுண்டிகளில் அதிரடிச் சோதனை நடத்தினர்.

    அப்போது திருப்பதி- தனப்பள்ளி சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அனுமதியில்லாமல் செயல்பட்டு வந்தது தெரிந்தது. அகில இந்திய வானொலி நிலையம் சாலையில் உள்ள பிரியாணி ஓட்டல் ஒன்றில் தரமற்ற இறைச்சி வகைகளை வாங்கி வந்து பிரியாணி தயாரித்து விற்பனை செய்தது தெரிந்தது. அந்த ஓட்டலில் விற்பனை செய்யப்பட்ட பிரியாணி மாதிரியை அதிகாரிகள் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றுள்ளனர். பரிசோதனையில் பிரியாணியில் தரமற்ற இறைச்சி வகைகள் பயன்படுத்தப்பட்டு இருந்தால், ஓட்டல் உரிமையாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

    திருப்பதியில் உள்ள பேக்கரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். பல பேக்கரிகளில் விற்பனை செய்யப்பட்ட கேக் வகைகள் தரமற்றதாக இருந்தன. அதனை பரிசோதனைக்காக எடுத்து சென்று ஆய்வுக் கூடத்துக்கு அனுப்பி வைத்தனர். திருப்பதி லீலா மகால் சர்க்கிளில் உள்ள புகையிலைப் பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

    அங்கு ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள குட்கா பாக்குகள், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்து, அலிபிரி போலீசில் ஒப்படைத்தனர்.   #Tirupati #TirupatiHotels
    ஐஎஸ் பயங்கரவாதி அடைக்கப்பட்டுள்ள கடலூர் சிறையில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    கடலூர்:

    சென்னையில் உள்ள புழல் சிறையில் கைதிகளுக்கு பல்வேறு உயர்ரக வசதிகள் செய்து கொடுத்ததால் அவர்கள் மிக மகிழ்ச்சியாக இருந்து வந்த படம் சமூக வலைதளங்களில் பரவியது. இதன் காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சிறைச் சாலைகளை போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திடீர் சோதனை செய்து வந்தனர்.

    இதற்கிடையே புழல் சிறையில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரான் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டு உள்ளார். மேலும் சிறை தகர்க்கப்பட்டு ஐஎஸ் தீவிரவாதி அன்சார் மீரானை மீட்டு கொண்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போலீஸ் மற்றும் சிறைத்துறை அதிகாரிகள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் சோதனை நடத்தியதில் செல்போன், சிம்கார்டு உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

    இந்நிலையில் இன்று காலை சுமார் 6 மணியிலிருந்து கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார், சிறைத்துறை அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் வெடிகுண்டு சோதனை நிபுணர்கள் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

    இந்த முறை சிறைத்துறை வளாகத்தில் சோதனை செய்யும்போது மோப்ப நாயும் வெடிகுண்டு நிபுணர்களும் புதிதாக சோதனையில் ஈடுபடுத்தப்பட்டது.

    ஐ.எஸ். தீவிரவாதி அன்சார் மீரானை சிறையை தகர்த்து மீட்டு செல்வோம் என மத்திய உளவுத்துறைக்கு தகவல் கிடைத்ததின் பேரில் போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்த நிலையில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் சிறை வளாகத்தில் சோதனை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள மளிகை கடையின் மேற்கூரையில் பதுக்கி வைத்திருந்த 82 கிலோ குட்காவை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
    சேலம்:

    சேலம் தாதகாப்பட்டி மெயின் ரோட்டில் உள்ள வட மாநிலத்தை சேர்ந்த ஈஸ்வரலால் என்பவருடைய மளிகை கடையில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா புகையிலை மறைத்து வைத்திருப்பதாக சேலம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி மாரியப்பனுக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து மாரியப்பன் தலைமையில் அலுவலர்கள் சம்பந்தப்பட்ட மளிகை கடைக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கடையின் மேற்கூரையில் மறைத்து 3 மூட்டைகளில் குட்கா வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த மூட்டைகளை வெளியே எடுத்து பார்த்தனர். அதில் மொத்தம் 82 கிலோ குட்கா இருந்தது. இவற்றை பறிமுதல் செய்து மாரியப்பன் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைத்தனர்.

    முதற்கட்டமாக மளிகை கடையின் உரிமத்தை ரத்து செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். மேல் நடவடிக்கை எடுப்பதற்காக  தாதகாப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அதிகாரிகள் பரிந்துரை செய்துள்ளனர். இது குறித்து மாரியப்பன் கூறியதாவது:-

    மளிகை கடையில் குட்கா விற்பனை செய்வதாக எங்களுக்கு ஒருவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் சோதனையிட்டு, குட்காவை பறிமுதல் செய்துள்ளோம். இதன் மதிப்பு ரூ. 60 ஆயிரம் இருக்கும். கடந்த 3 மாதத்தில் இதுவரை 550 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தடைசெய்யப்பட்டுள்ள குட்காவை விற்பனை செய்தால் அல்லது பதுக்கி வைத்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருச்சி விமான நிலையத்தில் பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது ரூ.37 லட்சம் வெளிநாட்டு பணத்தை பறிமுதல் செய்தனர்.
    கே.கே.நகர்:

    திருச்சி விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு நேற்றிரவு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் புறப்பட இருந்தது. அதில் செல்ல இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர்.

    அப்போது சென்னையை சேர்ந்த முகம்மது சுல்தான் மற்றும் தாஜுதீன் ஆகியோரது உடைமைகளை சோதனை செய்த போது அவர்களிடம் ரூ.37 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அதனை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இருவரிடமும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சி விமான நிலையத்தில் கடந்த சில மாதங்களாக தங்கம், வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு திருச்சி விமான நிலையத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது தங்கம் கடத்தலுக்கு திருச்சி விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகளே உடந்தையாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர்களை கைது செய்தனர். இருப்பினும் திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம் -வெளிநாட்டு பணம் கடத்தல் சம்பவம் நடைபெற்று வருவது அதிகாரிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    நல்லம்பள்ளியில் 100 க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர்.
    நல்லம்பள்ளி:

    தருமபுரி கலெக்டர் மலர்விழி உத்தரவின் பேரில் நல்லம்பள்ளி வட்டாட்சியர் பழனியம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர் அருள் மொழிதேவன் தலைமையில் குழு அமைத்து நேற்று நல்லம்பள்ளி பகுதியில் வணிக வளாகம், பேக்கரி, பெட்டி கடைகள், ஓட்டல், பூக்கடை, காய்கறி கடைகள், என 100 க்கும் மேற்பட்ட கடைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளை பறிமுதல் செய்தனர். 

    மேலும் பிளாஸ்டிக் பொருட்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக துணிப்பைகளை பயன்படுத்த வேண்டும் என்று சேம்பல் பைகளை காட்டி அறிவுறுத்தினர். 

    இந்த திடீர் ஆய்வுப்பணியின் போது துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தமிழ்மணி, வருவாய் ஆய்வாளர் முல்லைக்கொடி, ஊராட்சி செயலர் செல்வம், உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் ஊராட்சி அலுவலக பணியாளர்கள் உடன் இருந்தனர்.
    திருச்சி விமான நிலையத்தில் ரூ.7.30 லட்சம் மதிப்புள்ள கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
    கே.கே.நகர்:

    திருச்சியில் பன்னாட்டு விமான நிலையம்  செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களும்  விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. வெளிநாடுகளில் இருந்து வருபவர்கள் தங்கம் மற்றும் போதை பொருட்களை கடத்தி வருகின்றனர்.

    மேலும் இங்கிருந்து வெளி நாடுகளுக்கு நட்சத்திர ஆமைகளை கடத்தி  செல்கின்றனர். இதனை தடுக்க விமான பயணிகளை சுங்கதுறை அதிகாரி கடுமையாக சோதனை செய்கின்றனர். இந்த நிலையில் திருச்சி விமான நிலையத்தில் நேற்று காலை  மலேசியா மற்றும் இலங்கையில் இருந்து வந்த பயணிகளிடம் ரூ.7.30 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. நேற்று காலை மலேசியாவிலிருந்து திருச்சி வந்த மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளை  சுங்கத்துறை வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது கடலூரை சேர்ந்த ஹரிபிரகாஷ் என்பவர் உடைமைகளை சோதனை செய்தனர். 

    அப்போது அவர் உள்ளாடையில் மறைத்து எடுத்து வந்த ரூ.3.75 லட்சம் மதிப் புள்ள 120 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

    இதே போன்று நேற்று மதியம் இலங்கையில் இருந்து திருச்சி வந்த லங்கன் விமானத்தில் வந்த பயணிகளை சுங்கத்துறை வான்நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது விருத்தாசலத்தை  சேர்ந்த அன்பரசு என்பவர் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடையில்  மறைத்து எடுத்து வந்த ரூ.3.55 லட்சம் மதிப்புள்ள 114 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இருவரிடமும்  இருந்து ரூ.7.30  லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
    ஷெனாய்நகர் மற்றும் சென்ட்ரல் மெட்ரோ சுரங்கப்பாதையில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். #Metrotrain

    சென்னை:

    சென்னையில் பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வந்த மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை பணிகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. நேரு பூங்காவில் இருந்து விமான நிலையம் வரை தற்போது மெட்ரோ ரெயில் சேவை நடைபெற்று வருகிறது.

    தொடக்கத்தில் குறைந்த அளவிலேயே பயணிகள் பயணித்து வந்த நிலையில் இப்போது அதன் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்ட்ரல், அண்ணா சாலை ஆகிய பகுதிகளில் நடந்து வரும் பணிகள் நிறைவடைந்து சேவை தொடங்கினால்தான் முழு அளவில் பயன்பாட்டிற்கு வரும்.

    தற்போது விமான நிலையம்- நேரு பூங்கா, விமான நிலையம்- சின்னமலை, ஆலந்தூர்-பரங்கிமலை இடையே இரு வழியில் ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

    ஷெனாய்நகர்- நேரு பூங்கா இடையே ஒரு வழியில்தான் சேவை உள்ளது. மற்றொரு பாதை அமைக்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன.

    அதேபோல நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே நடந்த ஒரு வழி சுரங்கப்பாதை பணிகள் முடிந்துள்ளன. இந்த 2 வழித்தடங்களிலும் அனைத்து பணிகளும் நிறை வடைந்ததை தொடர்ந்து மெட்ரோ ரெயில் பாதுகாப்பு கமி‌ஷனர் ஆய்வு நடத்த திட்டமிடப்பட்டது.

    அதன்படி பெங்களூரில் இருந்து பாதுகாப்பு கமி ஷனர் கே.ஆர்.மனோகரன் தலைமையிலான குழுவினர் இன்று பாதுகாப்பு அம்சங்கள் குறித்து ஆய்வு பணியினை மேற்கொண்டனர்.

    ஷெனாய்நகர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து ஆய்வு பணி தொடங்கியது.

    முன்னதாக பாதுகாப்பு கமி‌ஷனர் கே.ஆர்.மனோகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஷெனாய்நகர்- நேரு பூங்கா இடையே மற்றொரு வழித்தடம் தயாராகி உள்ளது. 4.3 கிலோ மீட்டர் தூரமுள்ள அந்த பாதையிலும், நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே ஒரு பாதையிலும் ஆய்வு பணி இன்றும், நாளையும் மேற்கொள்ளப்படுகிறது. மொத்தம் உள்ள 7 கிலோ மீட்டர் சுரங்கப் பாதையில் 2 கட்டமாக ஆய்வு நடைபெறு கிறது.

    இதையடுத்து வருகிற 18 மற்றும் 19-ந்தேதியில் சின்னமலை- டி.எம்.எஸ். ஏ.ஜி. ஆபீஸ் இடையேயான 4.5 கிலோ மீட்டர் தூரம் சுரங்கப் பணிகளும் நிறைவு அடைந்துள்ளதையொட்டி அங்கு ஆய்வு பணி தொடங்கப்பட உள்ளது.

    இந்த ஆய்வின்போது பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதா என்பது ஆராயப்படும். விபத்து காலத்தில் பயணிகள் வெளியே செல்ல வசதி, பயணிகளின் பாதுகாப்பு வசதியில் எதுவும் குறை உள்ளதா? என ஆய்வு செய்து அறிக்கை தரப்படும். நாளை மாலைக்குள் இந்த ஆய்வு முடிந்து விடும்.

    போக்குவரத்து உள்ள நேரத்தில் டிராலி மூலமாகவும், நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ரெயிலை இயக்கியும் சோதனை நடத்தப்படும். பாதுகாப்பு சோதனை முடிந்து ஒரு வாரத்திற்குள் அறிக்கை கொடுத்து விடுவோம். இந்த ஆய்வின்போது குறைகள் இருந்தால் அவற்றை உடனே சரிசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    நேரு பூங்கா- சென்ட்ரல் இடையே சேவை தொடங்குவது குறித்து மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்யும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது மெட்ரோ ரெயில் நிர்வாக இயக்குனர் பங்கஜ் குமார் பன்சல், சுரங்கப் பாதை பணிக்கான பொது மேலாளர் வி.கே.சிங், அதிகாரி நரசிம்மபிரசாத் ஆகியோர் உடனிருந்தனர்.

    ×